குகை நமசிவாயர் - திருவண்ணாமலை
https://www.facebook.com/MyTvmalai/posts/495584673913399:0 |
தேவாரப்பாடல் பெற்ற தலங்களில் ஒன்றான திருப்பருப்பதம் என்னும் மல்லிகார்ஜுனத்தில் (ஆந்திர மாநிலம் ஸ்ரீசைலம்) அவதரித்தவர் நமசிவாயர். இவரது தாய்மொழி கன்னடம். லிங்காயத்து எனப்படும் பரம்பரையைச் சேர்ந்தவர். இந்த மரபில் வந்தவர்கள் தீவிர சைவர்கள். ஆண், பெண் என்று இப்பிரிவில் உள்ள அனைவரும் கழுத்தில் சைவ சின்னமான லிங்கத்தை அணிந்திருப்பார்கள். கழுத்தில் இருக்கும் லிங்கத்துக்கே முதல் வழிபாடு நடத்துவார்கள். இளம்வயதில் இருந்தே சிவபக்தியில் திளைத்தார். கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்கினார்.
ஒருநாள் கனவில் தோன்றிய சிவபெருமான்...
நமசிவாயா! தென்திசை நோக்கிப் புறப்பட்டு என்னிடம் வா! என்று கட்டளையிட்டார். தன் சீடர்கள் முந்நூறு பேருடன் அவர் புறப்பட்டார். விரூபாட்சித்தேவர் என்பவர் தலைமைச் சீடராக இருந்தார். வரும் வழியில் ஈசன் தன் திருவிளையாடலைத் தொடங்கினார்.
நமசிவாயர் ஒரு வீட்டில் திருமணம் நடப்பதைக் கண்டார். அவ்வீட்டினர் நமசிவாயரை ஆசிவழங்கும்படி வேண்டினர். அவ்வீட்டாருக்குத் திருநீறு கொடுத்தார். அவர்கள் திருநீறைப் பூசியபோது, அவ்வீட்டில் தீப்பிடித்தது. தீப்பிடித்ததற்கு நமசிவாயரின் வருகையே காரணம் என அவர்கள் எண்ணினர். ஆனால், நமசிவாயர், தன் அருட்சக்தியால் எரிந்த பொருட்களை மீண்டும் வரவழைத்தார். பின், அவர்கள் பூந்தமல்லியை வந்தடைந்தனர். அங்குள்ள கோயில் நந்தவனத்தில் மலர்ந்திருந்த பூக்களைப் பறித்துவரும்படி சீடர்களை அனுப்பினார். அவற்றை மாலையாக்கி சிவனுக்கு அணிவித்தார். உரியவரைக் கேட்காமல், பூப்பறித்தது குற்றம் என கோயில் நிர்வாகிகள் ஆட்சேபம் தெரிவித்தனர். பறித்த பூக்கள் எல்லாம் சிவனுக்காகவே அணிவிக்கப்பட்டன. ஒரு பூ கூட வீணாகவில்லை, என்று நமசிவாயர் விளக்கம் தந்தார். உம் வார்த்தை உண்மையானால், சிவனுக்கு அணிவித்த மலர்மாலை உங்கள் கழுத்தில் வந்து விழுமா, என அவர்கள் சவால் விட்டனர். நமசிவாயரும் பக்தியுடன், நற்றுணையாவது நமச்சிவாயவே என்று பக்தியுடன் வணங்கினார். அனைவரும் அதிசயிக்கும்படி மலர்மாலை நமசிவாயரின் கழுத்தில் வந்து விழுந்தது.
அப்பகுதியை ஆட்சி செய்து வந்த வேற்றுசமய மன்னனுக்கு இச்செய்தி எட்டியது. நமசிவாயரை அழைத்து, எல்லா சமயத்தையும் விட சைவமே உயர்ந்தது என்பது உண்மையானால், நான் சொல்வதைச் செய்யவேண்டும்! என்று நிபந்தனை விதித்தான். தன்னுடைய ஏவலர்களை அழைத்து, பழுக்க காய்ச்சிய இரும்புத்துண்டை இங்கே கொண்டு வா, என்று கட்டளையிட்டான். சைவமே சிறந்த சமயம். சிவபெருமானே உயர்ந்த தெய்வம்! என்று சொல்லிக் கொண்டு இந்த இரும்பைப் பற்றிக் கொள்ளுங்கள்! என்றான். இதற்கு நான் எதற்கு, என் சீடனே இதைச் செய்வானே, விரூபாட்சித்தேவரை நோக்கி கண்களால் கட்டளையிட்டார். செந்தழல் மேனிச் சிவனே போற்றி என்று சிவபிரானை வணங்கிய அவர், பழுக்கக் காய்ச்சிய இரும்பினைக் கையில் எடுத்து, இதுவும் ஈசன் அருளால் பழுத்த கனியே! என்று சொல்லி விழுங்கிவிட்டார். இதனைக் கண்ட அம்மன்னன் மனம் திருந்தி, சிவபக்தன் ஆனான்.
சிலகாலம் கழித்து, நமசிவாயர் சீடர்களுடன் திருவண்ணாமலை வந்து சேர்ந்தார். ஆலயதரிசனத்திற்குப் புறப்பட்டார். அண்ணாமலையாரை அவர் வணங்காமல், நலமாக இருக்கிறீரா?, என்று கேட்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். சிவாக்கிர யோகி என்பவர் இதைக் கண்டு கோபம் கொண்டார். பிரம்பால் அவரை அடித்தார். அப்போது, நமசிவாயரின் கண்களுக்கு அண்ணாமலையாரே அவரது குருவைப் போல காட்சியளித்தார். நமசிவாயா! கோயிலுக்குள் இருக்கும் இறைவனை வணங்குவதே சிறந்தது, என்றார். இதன் பிறகு அவர் உள்ளம் உருகி அண்ணாமலையாரை வணங்கினார். தன்னை அடித்த சிவாக்கிர யோகியைக் கண்டபோதெல்லாம் வணங்கி அன்பை வெளிப்படுத்தினார் நமசிவாயர் திருவண்ணாமலையில் இருந்த ஒரு குகையில் வசிக்கத் தொடங்கினார். அதன்பின், அவருக்கு குகை நமசிவாயர் என்ற பெயர் ஏற்பட்டது. சீடர்களும் தானும் நீராடுவதற்காக நான்கு குளங்களை அவர் வெட்டினார். அவை திருமுலைப்பால் தீர்த்தம், அருட்பால் தீர்த்தம், சங்கு தீர்த்தம், பாதத்தீர்த்தம் என்று பெயர் பெற்றன. அண்ணாமலையார் மீது பல பாடல்களைப் பாடினார். நல்ல கவிகளை இயற்றும் புலமையும், வெண்பா பாடுவதில் வல்லமையையும் வழங்கினான் ஈசன். அண்ணாமலையாரை மனதார தரிசிப்பதும், பூஜைக்குப் பூமாலைகள் கட்டித் தருவதும் நமசிவாயரின் அன்றாடப் பணிகள். இவருடைய சீடர்களுள் விருபாட்சி தேவரும், குரு நமசிவாயரும் முக்கியமானவர்கள் ஆவர்.
ஒருநாள், அண்ணாமலையாரை தரிசித்துவிட்டு, குகைக்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது ஒரு பெண் அழுதபடியே அவரை நோக்கி ஓடி வந்தாள். சுவாமி! அபலையான என்னைக் காப்பாற்றுங்கள். என் கணவர் திடீரென்று இறந்து விட்டார். வாழும் வழி தெரியாமல் நிர்கதியாய் இருக்கும் எனக்கு, உங்களை விட்டால் வேறு துணையில்லை, என்று பாதங்களில் விழுந்தாள். இரக்கப்பட்ட நமசிவாயர், கலங்காதே! அண்ணாமலையார் துணையிருப்பார். உன் கணவர் சிவனருளால் உயிர் பெறுவார். வீட்டுக்கு நிம்மதியாகச் செல். எல்லாம் நல்லபடியாய் நடக்கும், என்று ஆறுதல் கூறி வழியனுப்பினார். அதன்படியே, அவளது கணவரும் உயிர் பெற்று எழுந்தார். குகை நமசிவாயர் வாழ்ந்த காலத்தில், நகித் என்ற கொடியவன் திருவண்ணாமலையில் வசித்தான். கோயிலுக்கு வரும் பெண்களிடம் அட்டகாசம் செய்தான். இதைக்கண்டு கோபமுற்ற குகை நமசிவாயர், ஈசனே! உம் நெற்றிக் கண்ணை மூடிக் கொண்டு உறக்கத்தில் ஆழ்ந்து விட்டாயோ?, என்னும் பொருளில் பாடினார். இதன்பின், நகித்தின் முதுகில் ராஜபிளவை என்னும் நோய் உண்டானது. நோயின் வேதனையைத் தாங்க முடியாமல் உயிர் விட்டான். இவ்வாறு பலவித அற்புதங்களைச் செய்தார் குகைநமசிவாயர்.
இவ்வாறு அண்ணாமலையாரின் அற்புதங்களை அனுதினமும் பருகியபடி எண்ணற்ற சித்து விளையாடல்கள் மூலம் பலருக்கும் அருள்புரிந்து வந்த குகை நமசிவாயர் ஒரு கட்டத்தில், தான் இதுவரை வாழ்ந்தது போதும் என்று தீர்மானித்தார். எனவே, அண்ணாமலையாரிடம் சென்று தான் ஜீவசமாதி ஆக விரும்புவதாகவும், தன்னை ஏற்றுக் கொள்ளுமாறும் வேண்டினார். அதற்கு அண்ணாமலையார், நமசிவாயா..... எல்லாம் சரி தான். உன் காலத்துக்குப் பிறகு பூஜை செய்வதற்கு ஒரு வாரிசு வேண்டாமா? திருமணம் செய்து கொள்ளாமல் பிரம்மசாரியாகவே இருந்து காலம் தள்ளிவிட்டாய் என்று சொன்னவர், நமசிவாயர் திருமணம் செய்து கொள்வதற்குத் தானே ஒரு ஏற்பாடு செய்தார். ஸ்ரீசைலத்திலிருந்து குகை நமசிவாயரின் மாமன் மகளை வரவழைத்து இருவருக்கும் திருமணம் நடத்தி வைத்தார். சில காலத்திற்கு பிறகு முதல் வாரிசு பிறந்தது. ஈசனின் விருப்பப்படி வாரிசு பிறந்தாயிற்றே! எனவே அண்ணாமலையாரின் ஒப்புதலின் பேரில் தான் வாழ்ந்த குகையிலேயே ஜீவசமாதி அடைந்தார். இவருக்கு அவரது பரம்பரையில் வந்தவர்கள் தொடர்ந்து வழிபாடு நடத்தி வருகிறார்கள்.
திருவண்ணாமலையில் எழுந்தருளியிருக்கும் அண்ணாமலையாரின் மேல் ஏராளமான பாடல்கள் எழுதி இருக்கிறார் குகை நமசிவாயர். அருணகிரி அந்தாதி, சாரப் பிரபந்தம், திருவருணை தனி வெண்பா, அண்ணாமலை வெண்பா போன்றவைக் குறிப்பிடத்தக்கவை. திருவண்ணாமலை கிரிவலம் செல்லும் வழியில் அண்ணாமலையார் ஆலயத்துக்கு நேர் பின்புறம் பேகோபுரத் தெரு (பேய் கோபுரத் தெரு என்பது மருவி உள்ளது) அருகே உள்ள சிறு தெரு வழியாக சுமார் ஐந்து நிமிடம் நடந்து சென்றால், மலை தெரியும். அந்த மலையின் மையத்தில் ஒரு சிறு ராஜகோபுரம் தெரியும். இதுவே குகை நமசிவாய சுவாமிகளின் ஜீவ சமாதி ஆலயம் ஆகும். மலை அடிவாரத்தில் இருந்து சுமார் பத்து நிமிடம் மேலே நடந்தால், குகை நமசிவாயரின் ஜீவ சமாதியை அடைந்து விடலாம். ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மாதம் வளர்பிறை சதுர்த்தி திதி பூராட நட்சத்திரம் கூடிய தினத்தில் கும்ப லக்னத்தில் குருபூஜை நடந்து வருகிறது. அன்றைய தினத்தில் குகை நமசிவாயர் தன் கைப்பட எழுதிய சில ஓலைச்சுவடிகளை குருபூஜையின் போது வைத்து வணங்குகிறார்கள். அருணாச்சலேஸ்வரரை தரிசிக்க வரும் பக்தர்கள் குகை நமசிவாயரையும் தரிசித்து விட்டுச் செல்கிறார்கள். தன்னை தரிசிக்க வரும் பக்தர்களிடம் குகை நமசிவாயர் கூறுவது; அண்ணாமலையாரின் பாதத்தை சரண் அடைந்து விடு. எத்தகைய பாவம் இருந்தாலும் சரி... கர்மா உன்னைத் துரத்தினாலும் சரி... நீ புனிதம் அடைந்து விடுவாய். திருவண்ணாமலைக்குச் சென்றால் அண்ணாமலையாரின் திருவருளையும், குகை நமசிவாயரின் குருவருளையும் பெறுங்கள். ஆனந்த வாழ்வு பெற இவர்கள் இருவரும் உங்களை ஆசிர்வதிப்பார்கள்.
No comments:
Post a Comment